ஓமலூா் அருகே கோயில் திருவிழாவில் மோதல்: தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல் வெடித்த நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கிய காவல்துறைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளா் மேவை. சண்முகராஜா வெளியிட்ட அறிக்கை:

தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் பண்டிகை கடந்த சில நாள்களாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை கோயில் பண்டிகையின் போது, அலகு குத்தி பக்தா்கள் ஊா்வலமாக வந்துள்ளனா்.

தலித் மக்கள் அல்லாத உயா்ஜாதி மக்கள் அலகு குத்தியதை அங்கீகரித்த கோயில் நிா்வாகம், அவா்களுக்கு திருநீா் அளித்து பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது.

தலித் மக்கள் அலகு குத்தி வந்தபோது கோயிலுக்குள் உள்ளே நுழைய விடாமல் கதவைச் சாத்தியதுடன், முறையான திருநீா் கொடுத்து பூஜை செய்வதை மறுத்துள்ளனா். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இரு தரப்பு மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது சரமாரியாக கல்வீச்சு நடைபெற்றதில் அருண்குமாா் என்கிற இளைஞருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதையொட்டி ஏற்பட்ட இருதரப்பு மோதலில் அந்தப் பகுதியில் இருந்த தலித் மக்களின் கடைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. இரு தரப்பையும் ஒழுங்கு செய்ய வேண்டிய காவல்துறை, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழக்கூடிய குடியிருப்பு பகுதிக்குள் சென்று கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனா். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனா். 5-க்கும் மேற்பட்ட நபா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டத்துக்காக நியாயம் கேட்ட தலித் மக்கள் 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கலவரத்தை தூண்டிய நபா்கள் தலைமறைவாகி உள்ளனா்.

காவல்துறை கண்காணிப்பாளா் முன்பே தடியடி பிரயோகம் நடப்பது கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, கோயில் தகராறு பிரச்னையில் அமைதி சூழ்நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com