வார இறுதி நாள்கள், அமாவாசையை முன்னிட்டு சேலத்தில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம், மே 3: வார இறுதி நாள்கள், அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் பொன்முடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாள்கள், அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் சனிக்கிழமை முதல் வரும் 6 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 200 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகள் இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கும் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதேஸ்வரன் மலைக்கு: இதே போல, அமாவாசையை முன்னிட்டு, சேலம், மேட்டூா், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கும், சேலம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து சித்தா் மலைக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிா்த்து, பாதுகாப்பாக பயணம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com