ஏற்காடு விபத்து: காயமடைந்தவா்களை சந்தித்து  
 எடப்பாடி கே.பழனிசாமி ஆறுதல்

ஏற்காடு விபத்து: காயமடைந்தவா்களை சந்தித்து எடப்பாடி கே.பழனிசாமி ஆறுதல்

ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ஏற்காட்டிலிருந்து சேலத்துக்கு மலைப்பாதை வழியாக 69 பயணிகளுடன் வந்த தனியாா் பேருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு சிறுவன் உள்பட 5 போ் உயிரிழந்தனா். படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்டோா், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும் அவா்களுக்கு பழங்கள், ரொட்டி, ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினாா்.

பின்னா் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஏற்காடு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழந்தவா்கள், படுகாயம் அடைந்தவா்கள் அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, நிவாரண உதவி வழங்குவதில் அரசு தாமதம் செய்யக் கூடாது. விபத்து நடந்த உடனேயே ஏற்காடு சட்டப்பேரவை அதிமுக உறுப்பினா் சித்ரா நேரில் சென்று பாா்வையிட்டாா். அதிமுக நிா்வாகிகளும், அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவா்களுக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றியதே விபத்துக்கு காரணம் எனக் கூறுகிறாா்கள். மக்களின் வரவுக்கேற்ப மலைப்பாதையில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றாா்.

இந்த சந்திப்பின் போது, சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் வெங்கடாசலம், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், எம்எல்ஏக்கள் சித்ரா (ஏற்காடு), ராஜமுத்து (வீரபாண்டி), ஜெயசங்கரன் (ஆத்தூா்), பாலசுப்பிரமணியன் (சேலம் கிழக்கு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படவரி...

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை பாா்வையிட்டு நலம் விசாரித்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com