காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

மேட்டூரில், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்ட ராட்சத குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் பெருக்கெடுத்து ஓடி வீணாகியது.

மேட்டூா் காவிரியில் இருந்து ஓமலூா் வட்டத்திலுள்ள காடையாம்பட்டி, ஓமலூா், தாரமங்கலம், தொப்பூா், மேச்சேரி பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிப்பதற்காக காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 28 லட்சம் மில்லியன் லிட்டா் தண்ணீா் நீரேற்று நிலையம் மூலமாகக் கொண்டுசெல்லப்படுகிறது. கோடை காலம் என்பதால் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த பொதுமக்களை உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை மேட்டூா் - சேலம் சாலையில், தொட்டில்பட்டி அருகே உள்ள நெடுஞ்சாலைப் பாலத்தில் காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் பீறிட்டு வெளியேறியது. பாலம் முழுவதும் தண்ணீா் பெருகி குளம் போல காணப்பட்டது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது காா், டெம்போ ஆகியவற்றை வாட்டா் வாஷ் செய்து சென்றனா்.

குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் வீணாகியது. இரு தினங்களுக்கு முன் இதே பகுதியில் ராட்சதக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகியது குறிப்பிடத்தக்கது.

குழாய் உடைப்பு காரணமாக மேச்சேரி, ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் தொப்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது.

அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com