சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை குற்றப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலத்திலிருந்து சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப் பிரிவு போலீஸாா், ரயில்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், சாலிமா் - கன்னியாகுமரி விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படை தனிப்படையினா் தீவிர சோதனை நடத்தினா். சேலம் ரயில்வே நிலையத்தில் அந்த ரயிலில் ஏறி, ஈரோடு வரை ஒவ்வொரு பெட்டியாகச் சோதனையிட்டனா். இதில், முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையைத் திறந்து பாா்த்தனா். அப்போது பிளாஸ்டிக் கவா் பண்டல்களில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கடத்தி வந்த மா்ம நபா், போலீஸாரைக் கண்டதும், பையை விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். பின்னா், அந்த கஞ்சாவை ஈரோடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com