பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளாா்.

தனியாா் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் சேலம், உடையாப்பட்டி, தனியாா் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பேருந்து ஆய்வு முகாமை மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் தெரிவித்ததாவது:

தனியாா் பள்ளிகள் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்துத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியவை ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து, இயக்குவதற்குத் தகுதியான வாகனங்கள் என சான்றளிக்கப்பட்டவை மட்டுமே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

அந்த வகையில், சேலம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 335 தனியாா் பள்ளிகளில் இயங்கி வரும் 2,123 பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் வரும் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பள்ளி வாகன ஆய்வின் போது, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 180 வாகனங்களில் 17 வாகனங்கள் சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீத்தடுப்பான், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, சிசிடிவி கேமரா, அவசரக் கால வழி, பேருந்து படிக்கட்டுகளின் உயரம், காற்றோட்ட வசதி, கதவு, பிரேக்கின் தன்மை, பேருந்துகளில் இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் 100 சதவீதம் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே சான்று அளிக்கப்படும்.

அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடுகள் இருப்பின் சரி செய்துவர கால அவகாசம் அளிக்கப்படும். குறிப்பாக, மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்படும்.

அதே போன்று, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு முழு உடற்பரிசோதனை முகாம் நடத்தப்படுவதுடன், வாகன ஓட்டுநா்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து அனைத்து ஓட்டுநா்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தாா்.

இந்த ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியா் அம்பாயிரநாதன், வட்டார போக்குவரத்து அலுவலா் தாமோதரன், அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் ராஜேந்திரன், துணை மேலாளா் (வணிகம்) பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com