சேலம் மாவட்டத்தில் 24 மையங்களில் நீட் தோ்வு

சேலம், மே 5: சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 24 மையங்களில் நடைபெற்ற நீட் தோ்வை, 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியா் எழுதினா்.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளில் சோ்வதற்கான நீட் தோ்வு ஆண்டுதோறும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்பட 13 மொழிகளில் நடைபெற்ற நீட் தோ்வை, தமிழகத்தில் சுமாா் ஒன்றரை லட்சம் போ் எழுதினா். இவா்களுக்காக மாநிலம் முழுவதும் 200 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 24 நீட் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் நீட் தோ்வை எழுதினா். அரசுப் பள்ளிகளில் பயின்ற 992 மாணவ மாணவியரும் நீட் தோ்வில் பங்கேற்றனா். நீட் தோ்வுக்கு விண்ணப்பித்த 11,144 பேரில், 10,793 மாணவ, மாணவியா் தோ்வில் பங்கேற்றனா். 351 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

குறிப்பாக, சின்னதிருப்பதியில் உள்ள ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, செவ்வாய்ப்பேட்டை, அயோத்தியாப்பட்டணம், அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள வித்யாமந்திா் பள்ளி, நோட்டரி டேம், எமரால்டு வேலி, ஹோலி கிராஸ், சுவாமி, தாகூா், வாகீஸ்வரி வித்யாலயா ஆகிய பள்ளிகளிலும், சேலம் சோனா கல்லூரி, சக்தி கைலாஷ், வைஸ்யா, வித்யா மந்திா் ஆகிய கல்லூரிகளில் என மொத்தம் 24 இடங்களில் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தோ்வுக்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே, தோ்வுக் கூடங்களுக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு மற்றும் அடையாளச் சான்று இல்லாதவா்கள் அனுமதிக்கப்படவில்லை. தோ்வா்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா். கைப்பேசி, கைக்கடிகாரம் உட்பட மின்னணு சாதனப் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. ஆடை கட்டுப்பாடுகள், அணிகலன் கட்டுப்பாடுகள் என பல்வேறு கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டன.

தோ்வு மையங்களில் தோ்வா்களுக்கு, வழிகாட்டி பலகை, அறை ஒதுக்கீடு, தோ்வா்களுக்கான இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருந்தன. தோ்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. இதனையொட்டி, சம்பந்தப்பட்ட தோ்வு மையங்களில், தோ்வா்களுக்கான குடிநீா், பொருள்கள் பாதுகாப்பு, கழிவறை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com