பனைமரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சங்ககிரி அருகே பனைமரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைப்பேட்டை, பால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (22). கூலித் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஏறி உள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக சந்தோஷ்குமாா் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்தாா். அதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சந்தோஷ்குமாா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, மூளைச்சாவு அடைந்த சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோா் முன்வந்தனா்.

அதைத் தொடா்ந்து, சேலம் அரசு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் உடனடியாக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், மருத்துவக் குழுவினா் மூளைச்சாவு அடைந்த சந்தோஷ்குமாா் உடலில் இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் 2, சிறுகுடல், காா்னியா ஆகியவற்றை எடுத்தனா்.

இதயம் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், காா்னியா சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சந்தோஷ்குமாருக்கு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com