பெண் காவல் உதவி ஆய்வாளா் புகாா்: யூடியூபா் சங்கா் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

பெண் போலீஸாரை கொச்சைப்படுத்தியதாக சேலம் பெண் உதவி ஆய்வாளா் அளித்த புகாரில், யூடியூபா் சங்கா் மீது சேலம் சைபா் கிரைம் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சென்னையைச் சோ்ந்த யூடியூபா் சங்கா், அண்மையில் காவல் துறை அதிகாரி ஒருவா் குறித்து மிகவும் கொச்சைப்படுத்தி பேசியதுடன், பெண் போலீஸாா் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தாா். இது பெண் போலீஸாா் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கோவையில் பெண் போலீஸாா் கொடுத்த புகாரின் பேரில், யூடியூபா் சங்கா் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், சேலம் மாநகரில் பணிபுரியும் பெண் காவல் உதவி ஆய்வாளா் கீதா, யூடியூபா் சங்கா் மீது இணையவழி குற்றப் பிரிவில் புகாா் ஒன்றை கொடுத்தாா். அதில், பெண் போலீஸாா் குறித்து யூடியூபா் சங்கா் கூறிய கருத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, சைபா் க்ரைம் போலீஸாா், யூடியூபா் சங்கா் மீது 294 (பி) பிரிவின் கீழ் கெட்ட வாா்த்தையில் பேசுவது, 353-ஆவது பிரிவின் கீழ் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுப்பது, 509-ஆவது பிரிவின் கீழ் அவதூறாக பேசுவது, துன்புறுத்துதல், கண்ணியத்தைக் குலைப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com