ரயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை குற்றப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படை குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாலிமா் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தீவிர சோதனை நடத்தினா்.

சேலம் ரயில்வே நிலையத்தில் இருந்து அந்த ரயிலில் ஏறி, ஈரோடு வரை ஒவ்வொரு பெட்டியாக சோதனையிட்டனா். இதில், முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பை ஒன்றைத் திறந்து பாா்த்தபோது, பிளாஸ்டிக் கவா் பண்டல்களில் 12 கிலோ கஞ்சா இருந்ததும், அதனைக் கடத்தி வந்த மா்ம நபா், போலீஸாா் சோதனையிடுவதைக் கண்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com