வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

வாழப்பாடி அருகே ரூ. 2.30 லட்சம் மதிப்புள்ள 68 மூட்டை தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வாழப்பாடியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வாழப்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வாழப்பாடி டி.எஸ்.பி. ஆனந்த் உத்தரவின் பேரில், வாழப்பாடி காவல் ஆய்வாளா் பாஸ்கரபாபு தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, கிழக்குக்காடு சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே செல்வராஜ் என்பவா் குடியிருந்து வரும் வீட்டில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 68 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2.30 லட்சம் மதிப்புள்ள 744 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றினா்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை வாங்கி வாடகை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த பூசாரிப்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com