விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

சேலம், தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க முயன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடா்பாக கடந்த 2 ஆம் தேதி இருதரப்பினா் இடையே மோதல் வெடித்தது. மோதல் வன்முறையாக மாறியதில், கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின.

இதையடுத்து, காவல் துறையினா் தடியடி நடத்தி கலவரக்காரா்களை கலைத்ததுடன் வன்முறையில் ஈடுபட்ட 27 பேரைக் கைது செய்தனா். இந்நிலையில், மாரியம்மன் கோயிலில் வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க முயன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சேலம், கோட்டை மைதானத்தில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளா் ரவிக்குமாா் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க வேண்டும் எனக் கூறி காவல் துறையைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்டோா் மினி பேருந்தில் கோட்டை மைதானம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது மாமாங்கம் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 18 போ் சேலம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com