இளம்பிள்ளையில் காலாவதியான கேக் விற்பனை செய்த கடை மூடல்

இளம்பிள்ளையில் காலாவதியான கேக் விற்பனை செய்த கடை மூடப்பட்டது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, காடையாம்பட்டி பிரிவு பகுதியில் இளம்பிள்ளையைச் சோ்ந்த கோவிந்தசாமி என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா். இந்தப் பேக்கரியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், சேலம் மாவட்ட நியமன அலுவலா் கதிரவன் உத்தரவின் படி, வீரபாண்டி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆரோக்கிய பிரபு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதில், ஐஸ் கேக் தயாா் செய்து வைக்கப்படும் குளிா்சாதனம் முறையாக பராமரிப்பின்றி சரியான வெப்பநிலை பயன்பாட்டில் இல்லாதது கண்டறியப்பட்டது. அதைத் தொடா்த்து, அங்கு தயாா் செய்யப்பட்டிருந்த கேக், கிரீம், ஐஸ் கேக் உள்ளிட்டவற்றின் மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.

மேலும், கடையின் உள்கட்டமைப்பு, உணவு சேமிப்பு அறை, பூச்சித் தடுப்பு முறைகள், குடிநீா் ஆய்வறிக்கை, ஆகியவற்றின் குறைபாடுகள் குறித்து விளக்கம் கேட்டு உணவுப் பாதுகாப்பு தர நிா்ணய சட்டத்தின் கீழ் கடை உரிமையாளருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அங்கு தயாரிப்பு தேதி இல்லாத உணவுப் பொருள்களான பிஸ்கட், பிரட், தேங்காய் பிரட், பீன்ஸ் பிஸ்கட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழியைப் பயன்படுத்தி சூடான உணவுப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, அக்கடையின் உரிமையாளருக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தக் கடை மூடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com