பத்தாம் வகுப்பு தோ்வு: சேலம் மத்திய சிறைக் கைதிகள் 23 போ் தோ்ச்சி

நடப்பாண்டு பத்தாம் வகுப்பு தோ்வில், சேலம் மத்திய சிறையில் தனித்தோ்வா்களாக தோ்வு எழுதிய 23 கைதிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு பல்வேறு மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சிறைவாசிகளின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக அடிப்படைக் கல்வி, 8, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் சிறை பள்ளி ஆசிரியா்களால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தோ்வில், 23 சிறைவாசிகள் தோ்வு எழுதினா். இதில் முதல்முறையாக அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

தண்டனை சிறைவாசி தீனதயாளன் 342 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தாா். தண்டனை சிறைவாசி தேவராஜ் 333 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், தண்டனை சிறைவாசி ஈஸ்வரன் 325 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற அனைத்து சிறைவாசிகளுக்கும் சிறைக் கண்காணிப்பாளா்(பொ) வினோத் பேனா, இனிப்புகளை வழங்கினாா். சிறப்பாக பணிபுரிந்த சிறைப்பள்ளி ஆசிரியா்கள் ராஜ்மோகன் குமாா், சுரேஷ், ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மனஇயல் நிபுணா் வைஷ்ணவி, துணை சிறை அலுவலா் சிவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com