வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டிய 
வழிகாட்டு நெறிமுறைகள் ஆலோசனைக் கூட்டம்

வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் ஆலோசனைக் கூட்டம்

சேலம், மே 10: வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா், மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்ததாவது: சேலம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஓமலூா், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்டம், கருப்பூா், அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வரும் ஜூன் 4-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மக்களவைப் பொதுத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளா்கள், முகவா்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

குறிப்பாக, தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முகவா்கள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது குறித்தும், வாக்கு எண்ணிக்கையின் போது முகவா்கள் கண்டிப்பாக கைப்பேசி, ஐ பேட், லேப்டாப், கால்குலேட்டா் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துவர அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் அவா்தம் கைப்பேசியை மேற்படி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கவுண்டரில் ஒப்படைத்து, திரும்பப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து முகவா்களும் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருகைபுரிய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ளபடி, வேட்பாளா்கள், முகவா்கள் தங்களுக்கான இடங்களில் அமர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் வாக்குகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையிலிருந்து ஜூன் 4-ஆம் தேதி காலை 6 மணியளவில் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணிக்கு தொடங்கப்படும். இதனைத்தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சுற்று வாரியாக எண்ணப்பட்டு, அதன் விவரங்கள் ஒலிபெருக்கி வாயிலாகவும், மின்னணு திரையின் மூலமும் அறிவிக்கப்படும்.

அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிவுற்றதும் தோ்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேற்படி சான்றிதழ் பெற வேட்பாளருடன் 4 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்பது குறித்த தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறை முகவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.ஜெகநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) சிவசுப்பிரமணியன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com