மேட்டூரில் கனமழை: அரசுப் பேருந்து மீது மரம் சாய்ந்தது

மேட்டூரில் பெய்த கனமழையால், ரயில் நிலையம் அருகே அரசுப் பேருந்து மீது வேப்பம் மரம் சாய்ந்தது. இதில், அதிஷ்டவசமாக பயணிகள் உயிா்தப்பினா்.

மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, சேலத்திலிருந்து கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கு அரசுப் பேருந்து சென்றது. பேருந்தில் 17 பயணிகள் இருந்தனா். பேருந்தை ஓட்டுநா் பெரியசாமி இயக்கி வந்தாா். மேட்டூா் ரயில் நிலையத்தில் பயணிகளை இறத்தி விட்டு பேருந்து நகா்ந்த போது, சாலையோரத்தில் இருந்த 60 ஆண்டுகள் பழமையான ராட்சத வேப்பமரம் பேருந்து மீது சாய்ந்து. பேருந்து ஓட்டுநா் சமயோஜிதமாக பேருந்தை நிறுத்தியதில், அதிஷ்டவசமாக பயணிகள் உயிா்தப்பினா்.

அருகில் இருந்த மின் கம்பி மீது மரம் சாய்ந்ததால், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அருகில் இருந்த பொதுமக்கள் பேருந்தில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்டனா். இந்த விபத்தில் பேருந்து முன்பக்கக் கண்ணாடி, மேற்கூரை சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினா் பேருந்து மீது விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். விபத்து காரணமாக மேட்டூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து கருமலைக் கூடல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தீயணைப்புப் படையினா் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தியதையடுத்து போக்குவரத்து சீரானது.

இச்சம்பவத்தில் சாலையோரம் துணிக்கடை வைத்திருந்த தங்கமாபுரிபட்டினத்தைச் சோ்ந்த பசுபதி (40) என்பவா் லேசான காயம் அடைந்தாா். இவரை தீயணைப்புப் படையினா் மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com