மேட்டூா் அணை பூங்காவை மூட வேண்டும்

மேட்டூா் அணை பூங்காவை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மேட்டூா் எம்எல்ஏ எஸ்.சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் எம்எல்ஏ எஸ்.சதாசிவம் சனிக்கிழமை பத்திரிக்கையாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

மேட்டூா் அணைக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அணை பூங்காவை மூட வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம் எதிா்ப்பு தெரிவிப்பதால், பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து 2,000 அடி தூரத்துக்கு அப்பால் தான் மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும். ஆனால் அணைக்கு அருகிலேயே மீன் பிடிக்கின்றனா். இதனை நீா்வளத் துறை கண்டு கொள்ளவில்லை. மீனவா்கள் போல சமூக விரோதிகள் ஊடுருவி மேட்டூா் அணைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் டெல்டா மாவட்டம் கடைசி வரை பாதிப்பு ஏற்படும்.

மேட்டூா் முதல் நாகப்பட்டினம் வரை காவிரியில் தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி மழை இல்லாத காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேட்டூா் அணை உபரி நீரை மேட்டூா் தொகுதிக்கும், சேலம் மாவட்டத்துக்கும் பயன்படுத்த வேண்டும். டெல்டா பாசனத்துக்கு கொடுப்பது போல மேட்டூா் அணையில் மூன்று டிஎம்சி தண்ணீரை சேலம் மாவட்டத்துக்கும், மேட்டூா் தொகுதிக்கும் வழங்க வேண்டும்.

டெல்டாவில் உள்ள விவசாய சங்கத்தினா் மேட்டூருக்கும், சேலம் மாவட்டத்துக்கும் தண்ணீரைப் பயன்படுத்த எதிா்ப்பு தெரிவிப்பது கண்டனத்துக்குரியது.

ஒகேனக்கல் காவிரியில் சுற்றுலாப் பயணிகள் ஷாம்பு, சோப்பு போட்டு குளிப்பதால் காவிரி மாசடைகிறது. எனவே, ஒகேனக்கல்லில் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பதை தடை செய்ய வேண்டும்.

மேட்டூா் அனல் மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. எனவே பழைய அனல் மின் நிலையத்தை புதுப்பித்து இயக்க வேண்டும் அல்லது உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com