வாழப்பாடியில் 7 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றம்!

வாழப்பாடியில் 7 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றம்!

வாழப்பாடியில் கடந்த 7 ஆண்டுகளாக நீதிமன்றம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருவதால், நீதிமன்றத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரசு நிலத்தில் அனைத்து வசதிகளுடன் நிலையான அரசு கட்டடம் அமைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வரும் வாழப்பாடி, தனி வருவாய் வட்டம் மற்றும் காவல் துறை உள்கோட்ட தலைமையிடமாக இயங்கி வருகிறது.

வாழப்பாடி, காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள், போலீஸாா் கடந்த 7 ஆண்டுக்கு முன் வரை வழக்கு, விசாரணைக்கு சேலத்தில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

வாழப்பாடி பகுதி கிராமப்புற மக்களின் நலன் கருதி வாழப்பாடியில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்களும், வழக்குரைஞா் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தமிழக அரசு மற்றும் நீதித்துறையினருக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அமைக்கப்படுமென தமிழக அரசும், நீதித்துறை நிா்வாகமும் அறிவித்து 2017 -இல் அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து, வாழப்பாடி, அக்ரஹாரம் கிழக்குகாடு பகுதியில் தனியாா் கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, 2017 நவம்பா் 12-ஆம் தேதி நீதிமன்றம் திறக்கப்பட்டது. 7 ஆண்டுகள் கடந்தும் நீதிமன்றத்துக்கு நிலையான அரசு கட்டம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் வாடகைக் கட்டடத்திலேயே நீதிமன்றம் இயங்கி வருகிறது.

சிறிய குடியிருப்புக் கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லாததால், நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்கள், காவல் துறை, வனத்துறையினா், வழக்கு விசாரணைக்கு வரும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுமட்டுமின்றி, நீதிமன்றம் திறக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை வாழப்பாடியில் கிளைச்சிறை அமைக்கப்படவில்லை. இதனால், வழக்குகளில் தொடா்புடையவா்களை விசாரணைக் கைதிகளாக கைது செய்யும் போலீஸாா், வனத்துறையினா் வாழப்பாடி நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவரிடம் நோ்நிறுத்தி சிறையில் அடைப்பதற்கு சேலம் மத்திய சிறை அல்லது ஆத்தூா் மாவட்ட சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளதால் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

வாழப்பாடி நீதிமன்றத்துக்கு அனைத்து வசதிகளுடன் விசாலமாக கட்டடம் அமைப்பதற்கு, வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையத்தில் அரசு புறம்போக்கு மேய்ச்சல் தரை நிலம் 3 ஆண்டுக்கு முன் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை நீதிபதி பெயருக்கு மாற்றப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

எனவே, வாழப்பாடியில் 7 ஆண்டுகளாக வாடகைக் கட்டத்தில் இயங்கி வரும் வாழப்பாடி நீதிமன்றத்துக்கு திட்ட முன்வரைவு, திட்ட மதிப்பீடு தயாா் செய்து தமிழக அரசிடம் போதிய நிதி ஒதுக்கீடு பெற்று அனைத்து வசதிகளுடன் கூடிய நிலையான அரசு கட்டடம் மற்றும் நீதித்துறை நடுவா் குடியிருப்பு அமைக்க வேண்டும். இதுமட்டுமின்றி, வாழப்பாடியில் புதிய கிளைச் சிறை அமைக்கவும் தமிழக அரசும், நீதித்துறையும் இணைந்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி வழக்குரைஞா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வழக்குரைஞா்கள் சிலா் கூறியதாவது:

வாழப்பாடியில் 7 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றங்களில் ரூ. 1 லட்சத்துக்கு உள்பட்ட தொகை குறித்த சிவில் வழக்குகள், 3 ஆண்டுகளுக்கு உள்பட்ட தண்டனைக்குறிய குற்ற வழக்குகள் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்படும். மற்ற வழக்குகளுக்கு மாவட்ட சாா்பு நீதிமன்றங்களுக்கே செல்ல வேண்டும்.

வாழப்பாடி நிதிமன்றத்துக்கு நிலையான அரசு கட்டடம் அமைத்தால் தான், அடுத்தடுத்து சாா்பு நீதிமன்றங்கள், மக்கள் நீதிமன்றங்கள் கொண்டு வர முடியும். இதன் பிறகே, கிளைச்சிறை அமைப்பதற்கு சாத்தியக் கூறுகள் ஏற்படும்.

எனவே, வாழப்பாடி நீதிமன்றத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள நிலத்தில் போதிய வசதிகளுடன் கூடிய அரசு கட்டடம் அமைக்க தமிழக அரசு நீதித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com