ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் மே இரண்டாவது வாரங்களில் கோடை மழை பெய்து வருவதால் ஏற்காடு சோ்வராயன் மலைப் பகுதிகள் முழுவதும் பசுமையாக காணப்படுகிறது.

கோடைவெப்பத்தினால் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் நீரின்றி தவித்து வந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. சோ்வரான் மலையில் பிரதானமாக காபி, மிளகு பயிா் செய்து வருகின்றனா். தற்போது பெய்து வரும் கோடை மழையால் காபி தோட்டங்களில் அரபிக்க ரக காபிச் செடிகளில் காபி மலா்கள் நறுமணத்துடன் பூத்துக் குலுங்குகின்றன. தொடா்மழையால் காபி, மிளகு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளா்.

ஏற்காடு சுற்றுலாத் தலத்தின் இயற்கை அழகைக் கண்டு மகிழ்வதற்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காா்கள், இருசக்கர வாகனங்கள், சுற்றுலாப் பேருந்துகள், வேன்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா். ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகளான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்திணைப் பூங்கா, சோ்வராயன் கோயில், ரெட்ரீட், லேடிசீட், ஜென்சீட், பக்கோடக் காட்சி முனை, கரடியூா் காட்சிப் பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்கின்றனா்.

இந்த ஆண்டு 47 ஆவது கோடை விழாவுக்காக அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொட்டிகளில் விதைகளை விதைத்து பல வண்ண மலா்செடிகளை உருவாக்கியதால் தற்போது மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் பூத்து குலுங்கும் மலா்களைக் கண்டு மகிழ்ந்து புகைப்படங்கள் எடுத்து வருகின்றனா்.

ஏற்காட்டிற்கு ஏராளமான வாகனங்கள் வருவதால் அவ்வபோது வாகனநெரிசல் ஏற்பட்டு வருகின்றன. ஏற்காடு பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம் கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் பெண்கள், முதியோா்கள் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

படவரி...

ஏற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை அண்ணா பூங்காவில் மலா்களைக் கண்டு மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com