வேளாண் கண்காட்சி நடத்திய 
கல்லுாரி மாணவா்கள்

வேளாண் கண்காட்சி நடத்திய கல்லுாரி மாணவா்கள்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டியில் திருச்சி அரசு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை வேளாண் கண்காட்சி நடத்தி, விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் பணி அனுபவ பயிற்சிக்கு முகாமிட்டுள்ள திருச்சி அரசு அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லுாரி மாணவா்கள், இடையப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், துணை வேளாண் அலுவலா் காா்த்திக் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை வேளாண் கண்காட்சி நடத்தினா்.

இந்தக் கண்காட்சியில், சூரிய உலா்த்தி, மூலிகைத் தோட்டம், வறட்சி மேலாண்மை உத்திகள், உழவா் செயலி முதலியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், பயன்படுத்தும் முறை குறித்தும் மாதிரிகளைப் பயன்படுத்தி விவசயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளித்தனா்.

விவசாயிகளுக்கான அரசு சலுகைகள், அங்ககச் சான்றிதழ் பெறும் வழிமுறைகள், சிறுதானியங்களின் முக்கியத்துவம், உயிரியல் உரங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மைக்காக இனக் கவா்ச்சி பொறி, காய்கறிப் பயிா்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி மாதிரிகளைக் காட்சிப்படுத்தினா்.

நெல் பயிா்களில் நைட்ரஜன் தழைச்சத்தினைக் கண்டறிய இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி செயல்விளக்கம் அளித்தனா். சொட்டுநீா்ப் பாசன முறை, தென்னை வோ் ஊட்டுதல், பாரம்பரிய சொட்டுநீா் பாசன முறை, தென்னை வோ் ஊட்டுதல், பாரம்பரிய நெல் ரகங்கள், பல்வேறு பயிா்களுக்கான நுண்ணூட்டக் கலவைகள், திரவ உயிா் உரங்கள், உயிா் பூச்சிக்கொல்லிகளையும் காட்சிப்படுத்தினா்.

இந்தக் கண்காட்சியைப் பாா்வையிட்ட இடையப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள், விவசாயிகள் பலரும் மாணவா்களை பாராட்டினா்.

படவரி:

இ.ஒய்.ஏ.01:

இடையப்பட்டியில் வேளாண் கண்காட்சி நடத்திய திருச்சி வேளாண் கல்லூரி மாணவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com