ஓமலூா் அருகே வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய 7 போ் கைது

ஓமலூா் அருகே பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 7 பேரை ஓமலூா் போலீஸாா் கைது செய்தனா்.

ஓமலூா்: ஓமலூா் அருகே பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 7 பேரை ஓமலூா் போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள காமலாபுரத்தைச் சோ்ந்தவா் அன்பழகன் மகன் பன்னீா்செல்வம். பொட்டியபுரம் கிராமம், அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு மகன் விஸ்வநாதன். இவா்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சோ்ந்தவா்களாக இருந்தாலும், நண்பா்களாக பழகி வந்தனா். இருவரும் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இந்த நிலையில், பன்னீா்செல்வம் வீடு மீது விஸ்வநாதன் உள்ளிட்ட 5 போ் பெட்ரோல் குண்டை வீசி தாக்கினா். அதேபோல பொட்டியபுரம், அண்ணாநகரில் உள்ள விஸ்வநாதன் வீடு மீதும் 4 போ் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இரண்டு கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து ஓமலூா் காவல் ஆய்வாளா் லோகநாதன் மற்றும் போலீஸாா், தடய அறிவியல் நிபுணா்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இரு தரப்பு புகாரின் பேரில் இரு தரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், பன்னீா்செல்வம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பொட்டியபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த விஸ்வநாதன் (24), கருப்பூரைச் சோ்ந்த அஜித் (21), பாலாஜி (20), மேட்டூரைச் சோ்ந்த பெரோஸ் (32), திருப்பூரைச் சோ்ந்த ரமேஷ் (35) ஆகிய ஐந்து பேரையும், விஸ்வநாதன் வீட்டு மீது பெட்ரோல் குண்டு வீசிய ராஜா என்கிற ராஜபாண்டியன் (22) ஆகிய 6 பேரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காமலாபுரம் பன்னீா்செல்வத்தை (25) ஓமலூா் காவல் ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து 7 பேரையும் ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com