ஓமலூரில் பேரூராட்சிக்குச் சொந்தமான பூங்கா நிலம் மீட்பு

ஓமலூரில் பேரூராட்சிக்குச் சொந்தமான ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பூங்கா நிலம், பாதையை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனா்.

ஓமலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மன் நகரில் சுமாா் ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு பூங்கா கட்டுவதற்காக 4 ஆயிரம் சதுர அடி நிலம், அதற்கான பாதை இருந்தது. இந்த நிலத்தை தனியாா் ஒருவா் முழுமையாக ஆக்கிரமித்து சுற்றுச்சுவா் அமைத்துள்ளாா். இதனால், அந்தப் பகுதி மக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவா் செல்வராணியிடம் பொதுமக்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து அந்த இடத்தை அளவீடு செய்து பேரூராட்சி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற வருவாய்த் துறை, பேரூராட்சி அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனா். இதில், சுமாா் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் சதுர அடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து அளவீடு செய்து பூங்கா நிலம், அதற்கான பாதை மீட்கப்பட்டது.

தோ்தல் முடிவுகள் வந்த பிறகு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அந்த இடத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது அந்த இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com