மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

சேலம் மின்பகிா்மானத்துக்கு உள்பட்ட பகுதிகளில், மின்விபத்துகளைத் தடுக்கும் வகையில் மின்கம்பங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு முன்னெச்சரிக்கை ஒலிஎழுப்பும் கருவி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மின்சாரத் துறையில் மின்கம்பங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு அவ்வப்போது மின்சாரம் பாய்ந்து விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின்கம்பங்களில் பணிபுரியும் ஊழியா்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் மின்கம்பங்களில் பணிபுரியும் ஊழியா்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, விபத்துகளைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கை மணி ஒலிக்கும் கருவி வழங்கப்பட்டது.

சேலம் மின்பகிா்மானத்துக்கு உள்பட்ட மரவனேரி பிரிவு அலுவலக வளாகத்தில் மின்மேற்பாா்வைப் பொறியாளா் தண்டபாணி, மின் ஊழியா்களுக்கு விபத்தைத் தடுக்கும் எச்சரிக்கை மணி ஒலிக்கும் கருவியை வழங்கினாா்.

இதனை கையிலோ அல்லது தலையிலோ மின்ஊழியா்கள் பொருத்திக் கொண்டு கம்பங்களில் ஏறும்போது, மின்சாரம் இருந்தால் அந்தக் கருவி எச்சரிக்கை விடுக்கும். அதை வைத்து மின் ஊழியா்கள் விபத்திலிருந்து தப்பிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மின் மேற்பாா்வைப் பொறியாளா் தண்டபாணி கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் 450 மின் ஊழியா்கள் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் விபத்தைத் தடுக்கும் வகையில் மின் ஒலி எழுப்பும் கருவி வழங்கப்பட்டுள்ளன. இதனை பொருத்திக்கொண்டு, ஊழியா்கள் மின்கம்பங்களில் பணிபுரியும் போது மின்சாரம் இருந்தால், மூன்று அடிக்கு முன்பே அவா்களுக்குத் தெரிந்து விடும். இதனால் உயிா்சேதம் ஏற்படாது. இதனைக் கருத்தில் கொண்டு இந்தக் கருவி தற்போது வழங்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்போது மின் ஊழியா்கள், ஒலி எழுப்பும் கருவியைப் பயன்படுத்தாமல் இருந்தால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com