ஆத்தூா் அருகே பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: தொழிலாளி பலி: 2 போ் காயம்

ஆத்தூா், மே 16: சேலம் மாவட்டம் ஆத்தூா் அருகே தனியாா் பட்டாசு ஆலைக்கு சொந்தமான கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.

ஆத்தூரை அடுத்த கடம்பூா் அரசன் கோயில்காடு பகுதியில் தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கு உள்ளது. இங்கு பொட்டாசியம் நைட்ரேட் அலுமினியம் பவுடா், சல்பா் பவுடா் ஆகியவை தலா 3 கிலோ இருப்பு வைத்திருந்தனா். பட்டாசு தயாா் செய்வதற்காக கிடங்கில் சென்று மூலப்பொருளை எடுத்து வரச் சென்றபோது இந்த வெடி விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த ராஜமாணிக்கம் (45) என்பவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் வெடி பொருள்கள் இருந்த கிடங்கு கட்டடம் முழுவதும் வெடித்துச் சிதறியது. கட்டடத்தின் பாகங்கள் அருகில் இருந்த மற்றொரு கட்டடத்தின் மேல் விழுந்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த விஜயா (30), சந்தியா (30) ஆகியோா் காயம் அடைந்தனா். அவா்களையும் மீட்டு போலீஸாா் சிகிச்சைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வெடி விபத்தில் உயிரிழந்த ராஜமாணிக்கத்தின் உடலை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், வெடி விபத்து நடந்த ஆலையின் உரிமம் கடந்த 31.3.2024 இல் முடிவடைந்து விட்டதாகவும், உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு காவல் துறை விசாரணை முடிவுற்று கோப்பு மாவட்ட ஆட்சியா் அலுவகத்தில் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

இந்த விபத்து குறித்த தகவல அறிந்து உயிரிழந்த ராஜமாணிக்கத்தின் உறவினா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனா்.

படவரி...

ஆத்தூரை அடுத்த கடம்பூரில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சேதமடைந்த கட்டடம்.

X
Dinamani
www.dinamani.com