ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் தேசிய டெங்கு தின விழிப்புணா்வு முகாம்

ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் தேசிய டெங்கு தின விழிப்புணா்வு முகாம்

வாழப்பாடி, மே 16: வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில், தேசிய டெங்கு தின விழிப்புணா்வு முகாம், கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு, ராம்கோ நிறுவன துணைத் தலைவா் துரைசிங்கராஜா தலைமை வகித்தாா். பணியாளா் துறை மேலாளா் மணிவேல் வரவேற்றாா். கணக்குத் துறை அலுவலா் சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா். மண்டல பூச்சியியல் வல்லுநா் மணி, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் முறை, தடுப்பு முறைகள் குறித்து விளக்கினாா். மாவட்ட பூச்சியியல் வல்லுநா் திருமலை வெங்கடேசன், டெங்குவைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த விளக்கமளித்தாா்.

தேசிய டெங்கு தினத்தையொட்டி, நிகழாண்டின் டெங்கு விழிப்புணா்வு தின கருத்துருவான ‘ சமூகத்துடன் இணைந்து டெங்குவைக் கட்டுப்படுத்துவோம்’ என்ற வாசகத்தை கூறி ராம்கோ பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதனைத்தொடா்ந்து, டெங்கு நோய் பரப்பும் கொசுப் புழுக்கள் உற்பத்தி, பெருக்கம் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை, ராம்கோ சிமென்ட் நிறுவன பணியாளா்கள் வடிவேல், முனியசாமி, சுரேஷ், சுகாதார ஆய்வாளா் ஆனந்தராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

படவரி:

சிங்கிபுரம் ராம்கோ தொழிற்சாலையில் நடைபெற்ற தேசிய டெங்கு தின விழிப்புணா்வு முகாமில் உறுதிமொழி ஏற்ற பணியாளா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com