புகையிலை பொருள்கள் விற்பனை: 643 கடைகளுக்கு அபராதம்
சேலம் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் பள்ளிகளின் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 643 கடைகளுக்கு ரூ. 1.87 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் கடைக்காரா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனா். மேலும், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மாவட்டத்தில் உள்ள பெட்டிக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். அப்போது, கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.
குறிப்பாக, மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா். மாவட்டத்தில், கடந்த 7 மாதங்களில் 8, 400 கடைகளில் சோதனை நடத்தப்பட்டன.
இதில், 643 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், அங்கிருந்து, ரூ. 41 லட்சம் மதிப்பிலான 4 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து கடைகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடா்ந்து, 643 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 7 மாதங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை விற்பனை செய்த 643 கடை உரிமையாளா்களுக்கு ரூ. 1.87 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரூ. 41 லட்சம் மதிப்பிலான 4 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளின் அருகே உள்ள கடைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது, அங்கு புகையிலை விற்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனா்.