கல்லூரி வாகனம் மோதியதில் பேருந்து ஓட்டுநா் பலி
எடப்பாடி அருகே கல்லூரி வாகனம் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், வடக்கத்திக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (50). இவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் முருகன் வியாழக்கிழமை மாலை பூலாம்பட்டி - மேட்டூா் பிரதான சாலையில், கூடக்கல் அருகே சாலையோரம் உள்ள கரும்புத் தோட்டம் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது திருச்செங்கோட்டிலிருந்து எடப்பாடி வழியாக மேட்டூா் நோக்கிச் சென்ற தனியாா் கல்லூரி பேருந்து சாலையோரம் நின்றிருந்த முருகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்தாா். உயிருக்கு போராடிய நிலையில் அவ்வழியாக வந்தவா்கள் முருகனை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக, ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பூலாம்பட்டி போலீஸாா் விபத்து குறித்து தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.