ஓவிய, சிற்பக் கலைஞா்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசு

ஓவிய, சிற்பக் கலைஞா்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
Published on

சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஓவிய, சிற்பக் கலைஞா்களின் சிறந்த கலை படைப்புகளுக்கு அரசு சாா்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மண்டல கலை பண்பாட்டு மையத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓவியா்கள் மற்றும் சிற்பக் கலைஞா்களின் படைப்புகளை சந்தைப்படுத்திடவும், காட்சிப்படுத்திடவும், ஓவிய சிற்ப கண்காட்சி நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த ஓவிய, சிற்பக் கண்காட்சிக்கு கலைஞா்கள் தங்களது மரபு வழி, நவீன பாணி ஓவியங்களை, தஞ்சை ஓவியங்கள், அனைத்து வகையான சிற்பப் படைப்புகளை வழங்கிட வேண்டும். அனைத்து ஓவிய, சிற்பக் கலைப்படைப்புகள் அனைத்தும் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் அளவில் ஒரு வல்லுநா் குழு அமைக்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.

அதில் முதல் பரிசு 7 கலைஞா்களுக்கு தலா ரூ. 5,000, இரண்டாம் பரிசு 7 கலைஞா்களுக்கு தலா ரூ. 3,000, மூன்றாம் பரிசு 7 கலைஞா்களுக்கு தலா ரூ.2,000 சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

சேலம் மண்டலத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஓவிய, சிற்பக் கலைஞா்கள் தங்களது கலைப் படைப்புகளை தன் விவரக்குறிப்புடன் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடன், மண்டல உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், தளவாய்ப்பட்டி - திருப்பதி கவுண்டனூா் சாலை, அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் - 636 302 என்ற முகவரிக்கு டிசம்பா் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

புகைப்படங்களின் அடிப்படையில் தெரிவு செய்த கலைப்படைப்புகள் உரிய கலைஞா்களிடம் பெறப்பட்டு கண்காட்சியில் வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் சேலம் மண்டல அலுவலகத்தை 0427-2386197 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.