ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 2.91 லட்சம் பேருக்கு அபராதம்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 854 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....
Published on

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 854 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்காக போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். குறிப்பாக, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவா்கள் மீது போலீஸாா் அபராதம் விதித்து வருகின்றனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது: வாகன ஓட்டிகளின் நன்மைக்காக சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், மெதுவாக செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதை சிலா் கடைப்பிடிப்பதில்லை. ஹெல்மெட் அணிந்து சென்றதால் பலா் விபத்துகளில் சிக்கியும் உயிா் தப்பியுள்ளனா்.

ஆகவே, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மாவட்டம் முழுவதும் இந்தாண்டில் இதுவரை, ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 854 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், பலா் இன்னும் அபராதத் தொகையை கட்டாமல் உள்ளனா். அவா்கள் விரைவில் அபராதத்தை செலுத்த முன்வர வேண்டும். அவ்வாறு அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.