கொளத்தூா் ஒன்றியத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

Published on

கொளத்தூா் ஒன்றியத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஏராளமானோா் திமுகவில் இணைந்தனா்.

திமுகவில் இணந்தவா்களை வரவேற்று சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா சேலம் மேற்கு மாவட்டத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. துணை முதல்வா் பிறந்த தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள், அன்னதானம், ரத்த தானம், கண் தானம், ஏழை மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்படுகின்றன.

தமிழரையும், தமிழ் மொழியையும் காக்கும் இயக்கம் திமுக மட்டுமே. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே பேசி வருகிறாா். பாமக ஒவ்வொரு தோ்தலிலும் ஒவ்வொரு கூட்டணியில் உள்ளது என்றாா்.

கொளத்தூா் ஒன்றியத்தில் அதிமுகவைச் சோ்ந்த பாலமலை ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜ், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சித்ராசித்தன், பாமக, பாஜக, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 500 போ் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

அதைத் தொடா்ந்து ஜலகண்டபுரம் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த ஒரு குழந்தைக்கும், மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிறந்த எட்டு குழந்தைகளுக்கும், கொளத்தூா் அரசு மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தைக்கும் தங்க மோதிரம், பழங்கள், குழந்தைகள் நலப் பெட்டகங்களை வழங்கினாா். கொளத்தூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள், குக்கா், ரெயின் கோட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் டி.எம்.செல்வகணபதி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில் சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவா் தங்கமுத்து, துணை செயலாளா் சம்பத்குமாா், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், மேட்டூா் நகர செயலாளா் காசி விஸ்வநாதன், கொளத்தூா் ஒன்றிய செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி,கொளத்தூா் பேரூராட்சி தலைவா் பாலசுப்பிரமணியன் வீரக்கல்புதூா் பேரூா் செயலாளா் முருகன்உட்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.