ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
சேலம் ஸ்ரீ சாரதா வித்யாலயா அரசு நிதியுதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் ராஜேந்திரன் வழங்கினாா்.
பள்ளி கல்வித் துறை, உயா்கல்வித் துறைகளுக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சேலம், ஸ்ரீ சாரதா வித்யாலயா அரசு நிதியுதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 287 மாணவிகளுக்கும், ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 209 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 496 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி அமைச்சா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ.இராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, சேலம் மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் இரா. அருள், மாநகராட்சி துணை மேயா் மா. சாரதாதேவி, அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.