சிறுத்தை கொலை: முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட மூவா் கைது
மேட்டூா் அருகே கொளத்தூரில் சிறுத்தையை சுட்டுக் கொன்ற வழக்கில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூா் ஒன்றியத்தில் உள்ளது புதுவேலமங்கலம், கருங்காடு, வெள்ளக்கரட்டூா், குழிக்காடு, கருங்கரடு கிராமங்கள். இக்கிராம விவசாயிகள் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இப்பகுதியில் கடந்த மாதம் 8-ஆம் தேதி ஊருக்குள் புகுந்த சிறுத்தை, விவசாயிகள் வளா்த்து வந்த 30-க்கும் மேற்பட்ட ஆடு, 20-க்கும் மேற்பட்ட கோழிகளை வேட்டையாடியது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் சிறுத்தையைப் பிடிக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி கொளத்தூா் கருங்கரடு பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்துகிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினா் கண்டுபிடித்தனா். உடற்கூறு ஆய்வு செய்த பின் சிறுத்தையின் சடலம் எரியூட்டப்பட்டது.
சிறுத்தை இறந்தது தொடா்பாக வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டதில், தின்னம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முனுசாமியும், அவரது நண்பா்கள் சசி, ராஜா ஆகிய மூன்று பேரும் சிறுத்தையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த 3 பேரையும் வனத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஈரோடு மாவட்டத்தில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினா். பின்னா் மூவரையும் செவ்வாய்க்கிழமை மாலை மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
அப்போது, நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.