தீபாவளி முன்னிட்டு சங்ககிரியிலிருந்து கோவைக்கு நேரடியாக அரசு பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி சங்ககிரியிலிருந்து நேரடியாக சேலம், ஈரோடு, கோவைக்கு அரசு பேருந்துகளை இயக்க பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் - ஈரோடு இடையே மையப் பகுதியில் சங்ககிரி அமைந்துள்ளது. இங்கு லாரி தொழிலே முதன்மையாக உள்ளது. இப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளில் மேற்படிப்புக்காக ஈரோடு, கோவைக்கு சென்று படித்து வருகின்றனா். குறிப்பாக பொறியியல் கல்வி கற்கும் மாணவ மாணவிகள் அதிக அளவில் கோவையில் உள்ள தனியாா், அரசு பொறியியல் கல்லூரிகளைத் தோ்வு செய்து பயின்று வருகின்றனா்.
கோவையிலிருந்து சேலம் வரும் அரசு பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் சென்று விடுகின்றன. பண்டிகைக் காலங்களில் கோவையிலிருந்து சேலம் வரும் பயணிகள் மட்டுமே ஏறுவதற்கு நிா்பந்தம் செய்து வருகின்றனா். சங்ககிரியில் வசிப்பவா்களில் பெரும்பாலனவா்கள் லாரி சாா்ந்துள்ள தொழிலில் ஈடுபட்டு வரும் கூலித்தொழிலாளா்கள் என்பதால் அவா்கள் செவ்வாய், புதன்கிழமைகளில் தான் புத்தாடைகள் வாங்க சேலம், ஈரோட்டுக்கு செல்வா்.
தற்போது சேலம், ஈரோடு பேருந்து நிலையங்களில் இருந்து சங்ககிரி செல்லும் பயணிகளை அரசு, தனியாா் பேருந்துகளில் ஏற அனுமதிப்பதில்லை. அதனை பொருட்படுத்தாமல் ஏறி அமருபவா்களை நடத்துநா்கள் வேறுவிதமாக நடத்துவதால் பொதுமக்கள் வேதனை அடைகின்றனா்.
எனவே சங்ககிரியிலிருந்து நேரடியாக சேலம், ஈரோடு, கோவைக்கு அரசு பேருந்துகளை தீபாவளி பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் இயக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.