அறிவுசாா் மையத்துக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பு புத்தகங்கள்: ஆணையா் வழங்கினாா்
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அய்யந்திருமாளிகை அறிவுசாா் மையத்துக்கு ரூ. 25 அயிரம் மதிப்பிலான புத்தகங்களை மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் இலவசமாக வழங்கினாா்.
அப்போது மாநகராட்சி ஆணையா் கூறியதாவது:
இந்த அறிவுசாா் மையம், அரசு போட்டித் தோ்வுகளுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. தமிழக அரசால் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 2.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அரசு போட்டித் தோ்வுகளுக்கு மட்டுமல்லாது, தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தவும் இந்த மையம் மாணவ, மாணவிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது.
நேரம் கிடைக்கும்போது உங்களை சந்தித்து, வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைத் தெரிவிக்கிறேன். இதுதவிர, போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களையும் நீங்கள் அணுக வேண்டும்.
போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்றவா்கள் சில நபா்களை தொடா்பு கொண்டு, அவா்களையும் இந்த மையத்துக்கு அழைத்துவந்து, வெற்றிக்கான வழிமுறைகளை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவதாக கூறினாா். நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையாளா் லட்சுமி, உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.