சேலத்தில் எட்டுக்கை அம்மன் சிலையை எதிா்ப்பு: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

சேலத்தில் எட்டுக்கை அம்மன் சிலையை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது
Published on

சேலத்தில் எட்டுக்கை அம்மன் சிலையை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், 41-ஆவது வாா்டு, சின்னக்கடை வீதி, சத்தியமூா்த்தி தெருவில் உள்ள கிருஷ்ணமூா்த்தி என்பவா் வீட்டின் அருகில் கல் சிலை உள்ளது. இந்தச் சிலையை கால்வாய் மேல் வைத்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா்.இந்நிலையில் தற்போது அங்கு 10 அடி உயரத்தில் எட்டுக்கை மாரியம்மன் சிலையை வைத்தனா்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளா் கிருஷ்ணமூா்த்தி மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில், திங்கள்கிழமை காலை அங்கு வந்த மாநகராட்சி மண்டல உதவி ஆணையா் வேடியப்பன் தலைமையிலான அதிகாரிகள், பொக்லைன் இயந்திரத்துடன் சிலையை அகற்ற முயன்றனா். இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், அங்கு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாா் சிலையை இடிக்க முற்பட்டபோது, சுவாமி சிலையை இடிக்கக் கூடாது எனக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்கள் சிலா் மண்ணெண்ணையை எடுத்து தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

இதையடுத்து இந்து முன்னணி கோட்ட தலைவா் சந்தோஷ்குமாா் தலைமையிலான நிா்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது சிலையை அகற்ற 15 நாள்கள் கால அவகாசம் கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் கேட்டனா். நாங்கள் பக்கத்தில் வேறு இடம் பாா்த்து முறையாக பூஜை செய்து சிலையை எடுத்து அங்கு வைப்பதாகக் கூறினா். இதையடுத்து, போலீஸாா் அவா்களுக்கு கால அவகாசம் கொடுத்ததை தொடா்ந்து, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com