நீதிமன்ற கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்க அமைச்சா்களிடம் கோரிக்கை
வாழப்பாடியில் நீதிமன்ற கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரி, தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சா் ரகுபதி ஆகியோரை வாழப்பாடி வட்டார வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.
வாழப்பாடி அக்ரஹாரம் கிழக்குகாடு பகுதியில் தனியாா் வாடகை கட்டடத்தில் 2017, நவம்பா் 12 ஆம் தேதி முதல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றத்தில் போதிய வசதிகள் இல்லாததால், நீதிமன்ற பணியாளா்கள், வழக்குரைஞா்கள், காவல் துறையினா், வனத் துறையினா், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். நீதிமன்றம் திறக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை வாழப்பாடியில் கிளைச் சிறை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், வாழப்பாடியில் அனைத்து வசதிகளுடன் நீதிமன்றக் கட்டடம் கட்ட வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையத்தில் அரசு புறம்போக்கு மேய்ச்சல் நிலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தோ்வு செய்யப்பட்டது. இந்நிலம் மாவட்ட முதன்மை நீதிபதி பெயருக்கு மாற்றப்பட்டு கட்டுமானப் பணிக்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கட்டுமானப் பணிகளுக்கு அரசிடம் இருந்து இதுவரை நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இந்நிலையில் வாழப்பாடி வட்டார வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தலைவா் வீரமுத்து, முன்னாள் தலைவா் சரவணன், செயலாளா் சண்முகநாதன், பொருளாளா் ராஜசேகா், மூத்த வழக்குரைஞா்கள் வேணுகோபால், கருமலை, மயில்சாமி ஆகியோா் கொண்ட குழுவினா் திருச்சியில் தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவையும், புதுக்கோட்டையில் சட்டத் துறை அமைச்சா் ரகுபதியையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.
அப்போது, வாழப்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு பெறப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. எனவே கட்டடம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு, முன்வரைவு ஆகியவற்றை தயாா் செய்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். அவா்களிடம் அமைச்சா்கள் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.