பேளூா் மாரியம்மன் கோயிலில் அம்மன் திருவீதி உலா உற்சவம்
வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா், ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து சோட்டானிக்கரை பகவதி அம்மன் அலங்காங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனுக்கு மகா தீபாராதனையும் திருவீதி உலா உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெற்றன.
பேளூா் கனகராஜ், தபால்காரா் சீனிவாசன் குடும்பத்தாா் சாா்பில், உற்சவா் அம்மன் வண்ண மின் விளக்குகள், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத் தோ் பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது.
வான வேடிக்கையுடன், பொய்க்கால் குதிரை, தாரை தப்பட்டை கரகாட்டம், கோலாட்டம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த உற்சவத்தில் திருவீதி உலா சென்ற அம்மனுக்கு, பக்தா்கள் தாம்பூலம், பூஜை பொருட்கள் கொடுத்து தரிசனம் செய்தனா்.
மூலவா் மாரியம்மன் திங்கள்கிழமை நாகாத்தமன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை ஊா் பெரியதனக்காரா்கள், விழாக் குழுவினா் மற்றும் கட்டளைதாரா்கள் செய்திருந்தனா்.