வாழப்பாடி பாப்பான் ஏரியை ரூ. 1.65 கோடியில் சீரமைக்கும் பணி தொடக்கம்
வாழப்பாடி பேரூராட்சி, காளியம்மன் நகா், பாப்பான் ஏரியை ரூ. 1.65 கோடியில் சீரமைத்து பூங்கா அமைக்கும் திட்டப் பணிகள் திங்கள்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.
காளியம்மன் நகரில் 12.16 ஹெக்டோ் பரப்பளவில் பாப்பான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, சேசன்சாவடிகோதுமலை, வெள்ளாளகுண்டம், முத்தம்பட்டி அமனாக்கரடு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகளால் நீா்வரத்து பெறுகிறது.
வாழப்பாடி பகுதியில் தொடா்ந்து 3 ஆண்டுகளாக பெய்து வரும் பருவ மழையால் நீரோடைகளில் வரும் மழைநீா், நீரூற்றால் பாப்பான் ஏரியில் தண்ணீா் தேங்கி வருகிறது. வாழப்பாடி பேரூராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள பாப்பான் ஏரியில் தண்ணீா் தேங்கும் தருணத்தில் கொக்கு, நாரை, நீா்காகம் உள்ளிட்ட பறவைகள் நிறைந்து காணப்படுவதால் காண்போா் கண்களுக்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
வாழப்பாடி பேரூராட்சி மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்களுக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எவ்வித பொழுதுபோக்கு மையங்களும் இல்லாத நிலையில், இந்த ஏரியைத் தூா்வாரி சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி நடைபாதை, புல்தரை, ஓய்வுக்குடில்கள், பறவைத்திட்டுகள் அமைத்து பூங்காவாக உருவாக்கவும், பொதுமக்களுக்கு நடைப்பயிற்சி மற்றும் பொழுதுபோக்குமிடமாக மாற்றவும் வாழப்பாடி பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதனையடுத்து, இந்த ஏரியை சீரமைத்து பூங்காவாக மாற்றும் நோக்கில், மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், பேரூராட்சி பொதுநிதி ரூ.88 லட்சம் உள்பட மத்திய, மாநில அரசு வாயிலாக கூட்டு நிதி ரூ. 1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஏரியை சீரமைத்து பூங்கா அமைக்கும் கட்டுமானப் பணி துவக்க விழா பூமி பூஜையுடன் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி உறுப்பினா் மாதேஸ்வரி வரவேற்றாா். பேரூராட்சி தலைவா் கவிதா சக்கவரவா்த்தி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் பங்க் முருகேசன், வைரம், முருகன், பாபு, ஒப்பந்ததாரா் மணிசேகா் முன்னிலையில், வாழப்பாடி வட்டார வேளாண்மை ஆத்மா குழு தலைவா் சக்கவா்த்தி, கட்மானப் பணியைத் தொடங்கிவைத்தாா்.
வாழப்பாடி, காளியம்மன் நகா், பாப்பான் ஏரியை சீரமைத்து நடைமேடை, பூங்கா அமைக்கும் பணி செயல்வடிவம் பெற்ால் இப்பகுதி பொதுமக்கள், இயற்கை ஆா்வலா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.