நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால் சேலம் வீட்டு வசதி வாரிய அலுவலக தளவாடப் பொருள்கள் ஜப்தி

Published on

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால், சேலம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள பொருள்களை நீதிமன்ற உத்தரவுபடி அதன் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், சேலம் மாவட்டத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த போது, திருச்செங்கோட்டை அடுத்த கூட்டப்பள்ளி, கொல்லப்பட்டி, தாஜ்நகா், எஸ்பிபி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்காக 1977 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, தற்போது வரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக சேலம் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில், நிலத்தின் உரிமையாளா்கள் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வீட்டுவசதி வாரிய அலுவலக பொருள்களான கணினிகள், மேஜை, நாற்காலி உள்ளிட்ட தளவாடப் பொருள்களை ஜப்தி செய்யுமாறு நீதிபதி கவிதா உத்தரவிட்டாா்.

அதன்பேரில், நீதிமன்ற அமீனாக்கள் பாதிக்கப்பட்டவா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இழப்பீட்டுத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, நீதிமன்ற ஊழியா்கள் அங்கிருந்து திரும்பி சென்றனா்.

இந்நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை அய்யந்திருமாளிகை பகுதியில் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கிருந்த கணிப்பொறி, மேஜை, நாற்காலிகளை அவா்கள் ஜப்தி செய்ததால் பரபரப்பு நிலவியது.

X
Dinamani
www.dinamani.com