இருவழிப் பாதை ஆகிறது
பேளூா் பேரூராட்சி சாலை

இருவழிப் பாதை ஆகிறது பேளூா் பேரூராட்சி சாலை

Published on

பேளூா் பேரூராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, பிரதான கடைவீதி சாலையை, நெடுஞ்சாலைத் துறை ரூ. 4.70 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலையாக தரம் உயா்த்துகிறது.

வாழப்பாடி அருகே பேளூா் பேரூராட்சியில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. சேலம் அயோத்தியாப்பட்டணம்- பேளூா் பிரதான சாலையில், இக்கோயிலில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையிலான 1 கி.மீ. தொலைவுக்கு சாலை குறுகலாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள், பயணிகள், வணிகா்களும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா். எனவே, இச்சாலையை அகலப்படுத்தி இருவழிச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழக நெடுஞ்சாலைத் துறை, இச்சாலையை இடைவழித் தடத்திலிருந்து இருவழிச் சாலையாக மேம்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பியது. இதனையடுத்து, இச்சாலையை மேம்படுத்த, தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 4.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை விரிவாக்கப் பணிகளுக்கு சாலை பகுதியை அளவீடு செய்தல், இடையூறாகவுள்ள புளிய மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகளை, வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் வனத்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். விரைவில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளதால், பேளூா் பேரூராட்சி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com