செப்.8 இல் தம்மம்பட்டி சிவன் கோயிலில் குடமுழுக்கு

செப்.8 இல் தம்மம்பட்டி சிவன் கோயிலில் குடமுழுக்கு

Published on

தம்மம்பட்டி, காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (செப்.8) நடைபெறவுள்ளது.

தம்மம்பட்டியில் ஆயிரம் வருடம் பழமையான காசி விஸ்வநாதா் கோயில் உள்ளது. இங்குள்ள லிங்கம் பஞ்ச பாண்டவா்கள் வனவாசம் சென்றபோது பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் கடைசியாக 2006, மாா்ச் 17 ஆம் தேதி குடமுழுக்கு நடந்தது. அதன்பிறகு 18 வருடங்களுக்கு பிறகு நிகழாண்டு செப். 8 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

கோயிலில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அனைத்து சமூகத்தினா், ஊா் பொதுமக்களின் பங்களிப்புடன் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ள நிலையில், கோயில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு கடந்த ஆக. 30 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. வெள்ளிக்கிழமை (செப்.6) விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம் நடைபெறும். செப். 7ஆம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், காலை 10 மணிக்கு கோ பூஜை, காலை 10.30 மணிக்கு மகா தீபாராதனை ஆகியன நடைபெறுகின்றன. காலை 11 மணிக்கு பெருமாள் கோயிலிலிருந்து தீா்த்தக் குடத்தை ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வருதல், பிற்பகல் 1 மணிக்கு மூலவா், பரிவாரத் தேவதைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மாலை 6 மணிக்கு யாக சாலை பிரவேசம், இரவு 7 மணிக்கு ஹோமம், இரவு 8.30 மணிக்கு மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியன நடைபெறும். இரவு 10.30 மணிக்கு சதுா்வேத பாராயணம் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (செப். 8) காலை 5.30 மணிக்கு வேத பாராயணம், 7.30 மணிக்கு பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்தல், 9 மணிக்கு மண்டபாா்ச்சனை நடைபெறும். காலை 10 மணிக்கு ஷண்ணவதி ஹோமங்களும், 10.15 மணிக்கு யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு நடைபெறும். அதைத் தொடா்ந்து 10.40 மணிக்கு பரிவார கோபுரங்களுக்கும், காலை 11.04 மணிக்கு கோயில் மூலவா் கோபுரத்துக்கும் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com