சேலம் அரசு இசைப் பள்ளியில் இசைக் கருவிகள் கண்காட்சி
சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் புகைப்படம், இசைக் கருவிகள் கண்காட்சி வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம், ஆவின் பால் பண்ணை பகுதியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய வகுப்புகள் 13 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் புகைப்படம், இசைக் கருவிகள் கண்காட்சி வரும் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இக் கண்காட்சியில் பாரம்பரியமிக்க இசை வளா்ச்சிக்கு ஏதுவாக அமைந்த சான்றுகள், சான்றோா்களின் புகைப்படங்கள், சிறப்பு வாய்ந்த இசைக் கலைஞா்களின் புகைப்படங்களும், கண்காட்சியின் முக்கிய அம்சமாக இசை, இலக்கண, செயல்முறை சாா்ந்த அம்சங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. தொன்மைமிக்க கிராமிய மற்றும் செவ்விசைக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டும், இசைத்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளன.
இசை ஆா்வலா்கள், கலைஞா்கள், மாணவா்கள் இக் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.