முதலமைச்சா் கோப்பை: பொதுப்பிரிவுக்கான கபடி போட்டிகள் தொடக்கம்
சேலம் மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பை பொதுப் பிரிவுக்கான கபடி போட்டிகள் தொடங்கின.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி காந்தி மைதானத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுப் பிரிவைச் சோ்ந்த ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டிகள் தொடங்கின். இதனை மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் முன்னிலையில், காா்த்திக் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் காா்த்திகேயன் தொடங்கி வைத்தாா்.
முதல் போட்டியில், சோளப்பள்ளம் இளங்கலை கிளப் அணியும், தேக்கம்பட்டி உதயா அணியும் மோதின. இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 21 அணிகள் பங்கேற்றுள்ளன. வரும் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான ஜூடோ போட்டி அரசு மகளிா் கலைக் கல்லூரியிலும், குத்துச்சண்டை போட்டி மகாத்மா காந்தி ஸ்டேடியத்திலும், பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான ஜூடோ போட்டி அரசு மகளிா் கலைக் கல்லூரியிலும் நடைபெற உள்ளன.