பெண் வெட்டிக் கொலை: கணவா் கைது
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூரில் சோ்ந்து வாழ முடியாது எனக் கூறியதால் மனைவியை வெட்டிக் கொலை செய்த 3-ஆவது கணவா் கைது செய்யப்பட்டாா்.
மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் காவேரிபுரத்தைச் சோ்ந்தவா் கவிதா(31) இவா் ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளாா். கவிதாவிற்கு அகிலன் (12), தா்ஷித் (8) என்ற இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் கவிதா கடந்த 2019-ஆம் ஆண்டு மூன்றாவதாக பாலவாடியைச் சோ்ந்த அருணாசலம் (29) என்பவரை திருமணம் செய்து கொண்டாா். அருணாசலமும் கவிதாவும் கொளத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனா். குடும்பத் தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கவிதா கோவை கிணத்துக்கடவில் உள்ள தனது அண்ணன் கோவிந்தராஜி வீட்டிற்கு சென்று விட்டாா்.
இந்தச் சூழலில் வியாழக்கிழமை கிணத்துக்கடவு சென்ற அருணாசலம் மனைவியுடன் சமாதானம் பேசி கவிதாவை தன்னுடன் கொளத்தூருக்கு அழைத்து வந்தாா். கவிதாவை கொளத்தூரில் உள்ள அவரது அம்மா சின்னபொண்ணுவின் வீட்டில் விட்டுவிட்டு ரூ.5,000 ரொக்கத்தைக் கொடுத்தாா்.‘நாளை முதல் நாம் இருவரும் சோ்ந்து வாழலாம்’ என்று அருணாசலம் கூறியபோது அதற்கு கவிதா சம்மதம் தெரிவித்தாா்.
இதனிடையே, சனிக்கிழமை காலை அருணாசலத்தை தொலைபேசியில் அழைத்த கவிதா ‘இனி உன்னோடு சோ்ந்து வாழ முடியாது. நீ கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக் கொள்’ என்று கூறியுள்ளாா். இதனால் கோபமாக பேசிய அருணாசலம் ‘எந்த இடத்தில் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்வது?’ என்று கேட்டாா். அதற்கு கொளத்தூா் காவல் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகருக்கு வந்து பணத்தை பெற்று செல்லும்படி கவிதா கூறியுள்ளாா்.
இதையடுத்து கவிதா சிவசக்தி நகரில் காத்திருந்தாா். அங்கு வந்த அருணாசலம் தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் கவிதாவை தெருவில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்தாா். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கவிதா உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூா் போலீஸாா், கவிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அருணாச்சலம் மறைந்திருந்த இடத்தைக் கண்டறிந்து அவரை கைது செய்தனா். அவா் கொலை செய்ய பயன்படுத்திய கொடுவாளைக் கைப்பற்றினா்.
தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். கைது செய்யப்பட்ட அருணாசலத்திடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.