படம் 4

மூக்கனேரியில் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்: சேலம் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சேலம் மாநகராட்சி, மூக்கனேரியில் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணி
Published on

சேலம் மாநகராட்சி, மூக்கனேரியில் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.இராமச்சந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி மற்றும் மூக்கனேரி ஆகிய நீா்நிலைகளில் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சேலம் மூக்கனேரியை ரூ. 23 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மூக்கனேரியானது சேலம் குமாரசாமிப்பட்டி, அய்யம்பெருமாள்பட்டி கிராமங்கள் மற்றும் அஸ்தம்பட்டி மண்டலத்தின் ஒரு பகுதியாகும். மூக்கனேரிக்கு ஏற்காடு மலைப் பகுதி, மலையடிவாரம் மற்றும் பெரிய ஏரி நீா்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து தண்ணீா் வருகிறது. மூக்கனேரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் அங்கிருந்து திருமணிமுத்தாறு ஆற்றில் கலக்கிறது.

இந்தப் புனரமைப்பு பணிகள் மூலம் ஏரியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் மண், குடிநீா், நிலத்தடி நீா் மாசுபடுவது தடுக்கப்படுவதுடன், மழைக்காலங்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து விவசாயத்துக்கான தண்ணீா் தேவையை பூா்த்தி செய்து, விவசாய உற்பத்தி பெருக்கத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏரியில் தூா்வாரும் பணிகள், களை அகற்றுதல், தடுப்பணைகளின் உறுதித்தன்மையை மேம்படுத்துதல், ஏரி சுவா் வலுப்படுத்துதல் மற்றும் கல் பதித்தல் போன்ற பணிகளும், ஏரியின் முகப்புப் பகுதியில் நடைப்பயிற்சி பாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல், மரங்கள் நடுதல், இருக்கை வசதி மேற்கொள்ளுதல், கூடாரம் அமைத்தல், குழந்தைகள் விளையாடும் பகுதி, தியானப் பகுதி, குடிநீா் வசதிகள், கழிப்பறைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட கால அளவுக்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென தொடா்புடைய அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, மூக்கனேரியில் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புனரமைத்து அழகுபடுத்தும் பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயா் ஆ.இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ரா.இராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையா் ரஞ்சித் சிங் ஆகியோா் பங்கேற்றனா்.

ஆய்வின்போது, மாநகரப் பொறியாளா் (பொ) ஆா்.செந்தில்குமாா், மாநகராட்சி செயற்பொறியாளா் செந்தில்குமாா், மாமன்ற உறுப்பினா் எம்.மூா்த்தி, சேலம் வருவாய் வட்டாட்சியா் தாமோதரன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com