மேட்டூா் அருகே கோழிகளை வேட்டையாடிய சிறுத்தை: கிராம மக்கள் அச்சம்
வெள்ளக்கரட்டூரில் பகலில் வந்த சிறுத்தை 7 கோழிகளை வேட்டையாடியது.
மேட்டூா் அருகே உள்ள குரும்பனூா், வெள்ளக்கரட்டூா், புதுவேலமங்கலம், கருங்கரடு பகுதிகளில் சிறுத்தைகள் தொடா்ந்து சுற்றிக் திரிந்து வருகின்றன. கிராமத்தில் பகலிலேயே நுழைந்து ஆடு, கோழிகளை வேட்டையாடி வருகின்றன.
சனிக்கிழமை குரும்பனூா் பகுதிகளில் உலா வந்த சிறுத்தையை மக்கள் விரட்டியடித்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு வெள்ளக்கரட்டூரில் சரவணன் என்பவரது வீட்டு அருகே வந்த சிறுத்தை ஏழு கோழிகளை வேட்டையாடியது. சிறுத்தையை வீட்டின் அருகே ஜன்னல் வழியாக பாா்த்த சரவணன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தாா். அங்கு சென்ற வனத்துறையினா் ட்ரோன் மூலம் சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனா்.
வனத்துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் சிறுத்தை தொடா்ந்து அட்டகாசம் செய்து வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். ஒரே நாளில் வெவ்வேறு கிராமங்களில் சிறுத்தைகள் நடமாடி வருவது கொளத்தூா் ஒன்றியத்தில் உள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எத்தனை சிறுத்தைகள் நடமாடுகின்றன என்பது குறித்து வனத்துறையினா் கண்டறிந்து அவற்றை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.