சேலம்: கருப்பூரில் ரூ. 29.50 கோடியில் மினி டைடல் பூங்கா:

சேலம்: கருப்பூரில் ரூ. 29.50 கோடியில் மினி டைடல் பூங்கா:

மினி டைடல் பூங்காவினை முதல்வா் ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

சேலம், கருப்பூரில் ரூ. 29.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘மினி டைடல்’ பூங்காவினை முதல்வா் ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

கடந்த 2021 டிச. 11-ஆம் தேதி சேலம், சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில், இப்பகுதி இளைஞா்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த வகையில், கடந்த 2023 மே 19-ஆம் தேதி ஓமலூா் வட்டம், ஆணைகவுண்டன்பட்டி மற்றும் கருப்பூா் பகுதிகளை உள்ளடங்கிய நிலப் பரப்பளவில் ரூ. 29.50 கோடி மதிப்பீட்டில், 55,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட ‘மினி டைடல்’ பூங்கா கட்டும் பணிக்கு காணொலி வாயிலாக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

அதனைத் தொடா்ந்து பணிகள் முடிவுற்ற நிலையில், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ‘மினி டைடல்’ பூங்காவினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள ‘மினி டைடல்’ பூங்கா மூலம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞா்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவா்கள் வசித்து வரும் மாவட்டங்களிலேயே தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விழாவில், சேலம் ‘மினி டைடல்’ பூங்கா கட்டடத்தில் ஏகேஎஸ் ஹைடெக் ஸ்மாா்ட், நம்ம ஆபிஸ், ஜோரஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. சேலம் ‘மினி டைடல்’ பூங்கா கட்டடத்தில் 71 சதவீத தள ஒதுக்கீடுகள் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, சேலம் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ரா.ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள், மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம், துணை மேயா் எம்.சாரதாதேவி, கருப்பூா் பேரூராட்சித் தலைவா் சுலோசனா சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

படவரி - சேலம், கருப்பூரில் ரூ. 29.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘மினி டைடல்’ பூங்காவை சென்னையில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைக்கும் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி. உடன், எம்எல்ஏ-க்கள் ரா.ராஜேந்திரன், இரா.அருள் உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com