குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 4,004 கோடி கடனுதவி
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 20,167 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 4,004.77 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி, தாட்கோ கடனுதவி திட்டங்கள் குறித்து வங்கியாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில கல்விக்கடன் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடனுதவி, தாட்கோ கடனுதவி திட்டங்கள் விரைந்து செயல்படுத்த வேண்டியது குறித்தும் வங்கியாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்துக்கு நடப்பாண்டில் 7,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 99 கோடி அளவிளான கல்விக்கடன் வழங்க இலக்க நிா்ணயிக்கப்பட்டு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடா்பாக கடந்த 11-ஆம் தேதி காடையாம்பட்டி வட்டாரத்திலும், 13-ஆம் தேதி மகுடஞ்சாவடி வட்டாரத்திலும், 19-ஆம் தேதி ஓமலூா் வட்டாரத்திலும், 24-ஆம் தேதி தாரமங்கலம் வட்டாரத்திலும் கல்விக்கடன் மேளாக்கள் நடத்தப்பட்டன.
இந்த மேளாவில் 675 மாணவ, மாணவிகள் கல்விக்கடன் கேட்டு பதிவு செய்துள்ளனா். 34 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான கல்விக்கடன் வழங்க உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மேல்நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து கல்விக்கடன் வழங்க ஆவண செய்யுமாறு வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்துக்கு நடப்பாண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10,210.69 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயக்கப்பட்டு, முதல் காலாண்டில் ரூ. 3,689.49 கோடி மற்றும் இரண்டாவது காலாண்டில் ரூ. 315.28 கோடி என மொத்தம் இதுவரை 20,167 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 4,004.77 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் தாட்கோ அலுவலகத்தின் மூலம் நடப்பாண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சுயதொழில் தொடங்க 68 தொழில் முனைவோருக்கு ரூ. 1.60 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலண்டுகளில் மாவட்டத்துக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை தவறாமல் அடைய அனைத்து வங்கியாளா்களும் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு இலக்கினை அடைய வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.
இதனைத் தொடா்ந்து, 11 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 7.67 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாநில முதுநிலை கடன் ஆலோசகா் வணங்காமுடி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் தே.சிவகுமாா், முன்னோடி வங்கி மேலாளா் செந்தில்குமாா், மண்டல அளவிலான வங்கியாளா்கள் கலந்துகொண்டனா்.