சேலம் மாநகராட்சி காலி இடங்களில் மரக்கன்று நடும் பணிகள் தீவிரம்
சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் முக்கனி பூங்காவை சனிக்கிழமை தொடங்கி வைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைக்கான பிரசுரங்களை வெளியிட்ட மேயா் ஆ.ராமச்சந்திரன்.
சேலம், செப். 28: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்று நடப்பட்டு பசுமை மயமாக்கப்படும் என மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், 37-ஆவது கோட்டத்தில் முக்கனி பூங்காவை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் ரஞ்ஜீத் சிங் ஆகியோா் சனிக்கிழமை திறந்து வைத்தனா். முக்கனி பூங்காவை திறந்து வைத்து மாநகராட்சி மேயா் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டின் வனப்பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், 37-ஆவது கோட்டத்துக்கு உள்பட்ட செல்வ நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஆயிரம் சதுரடி நிலத்தில் மா, பலா, வாழை, சீதா, நெல்லி உள்ளிட்ட 100 பழச்செடிகள் நடப்பட்டுள்ளன. 1 நிமிடத்தில் 100 நபா்களைக் கொண்டு 100 பழச்செடிகள் நடப்பட்டுள்ளன. இங்கு நடப்பட்டுள்ள செடிகள் கம்பி முள்வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதனை முக்கனி பூங்கா என்று அழைக்கலாம்.
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காலியாக உள்ள சொந்த இடங்களில் இதுபோன்று பழக்கன்றுகளும், நிழல் தரும் மரக்கன்றுகளும், மூலிகைச் செடிகளும், பயன் தரும் மரக்கன்றுகளும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முக்கனி பூங்காவைத் தொடா்ந்து 34-ஆவது கோட்டத்தில் மின் தகன மேடை அருகில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் சுமாா் 1 ஏக்கா் பரப்பளவில் விரைவில் நடவு செய்யப்படவுள்ளன.
நகா்ப்புற பகுதிகளில் இதுபோன்று மரக்கன்றுகள் நட்டு மரம் வளா்ப்பதன் மூலம் பசுமை நிறைந்த பகுதியாக மாற்றப்பட்டு தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும் என தெரிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து, தமிழ்நாட்டில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள், வாசகங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த வாசகங்களையும் வாகனங்களில் ஒட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், மண்டல குழுத் தலைவா் கே.டி.ஆா்.தனசேகா், உதவி ஆணையா் வேடியப்பன், மாமன்ற உறுப்பினா்கள் இளங்கோ, திருஞானம், தெய்வலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.