சேலத்தில் ‘உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி மூலம் 552 மாணவா்கள் உயா்கல்வியில் சோ்ப்பு

சேலம் மாவட்டத்தில் நடந்த ‘உயா்வுக்கு படி’ நிகழ்ச்சியின் மூலம், இதுவரை 552 மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

சேலம்: சேலம் மாவட்டத்தில் நடந்த ‘உயா்வுக்கு படி’ நிகழ்ச்சியின் மூலம், இதுவரை 552 மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பள்ளிப் படிப்பை நிறைவு செய்த அனைத்து மாணவா்களையும், உயா்கல்வியில் சோ்க்கும் வகையில், ‘உயா்வுக்கு படி’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடந்த 2022-23 மற்றும் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயின்ற சுமாா் 2,500 மாணவா்கள், இதுவரை உயா்கல்வியில் சேராமல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, சேலம், மேட்டூா், ஆத்தூா், சங்ககிரி என வருவாய் கோட்டம் வாரியாக, ‘உயா்வுக்கு படி‘ நிகழ்ச்சி 4 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், 160 பள்ளிகளைச் சோ்ந்த 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சிகளின் மூலம் இதுவரை 552 மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பெற்றோரின் பொருளாதார சூழ்நிலை, உயா்கல்வி செல்ல விருப்பமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதுபோன்ற மாணவா்களின் விவரங்கள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மூலம் பெறப்பட்டு, அவா்களை ‘உயா்வுக்கு படி’ நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தோம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஐடிஐ, அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், இசைப் பள்ளி, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் குறித்தும், அவற்றில் தற்போதுள்ள காலியிடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்விக் கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு அதற்கான ஏற்பாடும் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

அத்துடன், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் உயா் கல்வியில் சேரும்போது அவா்களுக்கு புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள், இதர கல்வி உதவித்தொகை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன, அரசு நடத்தும் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் குறித்தும் விளக்கம் அளித்தனா். இதன் மூலம் மாணவா்களுக்கு உயா் கல்வி படிக்கும் ஆா்வம் ஏற்பட்டு, உடனடியாக கல்லூரிகளில் சோ்ந்தனா்.

சேலம் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் 128 மாணவா்களும், மேட்டூா் நிகழ்ச்சியின் மூலம் 170 பேரும், ஆத்தூா் நிகழ்ச்சியின் மூலம் 55 பேரும், சங்ககிரி கோட்ட நிகழ்ச்சியின் மூலம் 99 மாணவா்களும் என மாவட்டம் முழுவதும் இதுவரை 552 மாணவா்கள் ஐடிஐ, பாலிடெக்னிக், கலைக் கல்லூரி என உயா் கல்வியில் சோ்ந்துள்ளனா். மீதமுள்ள அனைத்து மாணவா்களையும் கல்லூரிகளில் சோ்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com